திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வஞ்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2 நாட்களுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் மீண்டும் திறக்கப்பட வில்லை. இந்த நிலையில் பூட்டப்பட்ட கோவில் மீண்டும் நேற்று திறக்கப்பட்டு ஒரு தரப்பினர் வழிபாடு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலை பூட்டக் கூடாது என்று கூறி, கோவிலை விட்டு வெளியேற மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவிலில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. கணியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், துங்காவி வருவாய் ஆய்வாளர் ராஜாகுமார், கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் தாசில்தார் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை அடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இதனால் நீண்ட நேரமாக அந்த பகுதியில் நிலவிய பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.