உடுமலை அருகே தமிழக- கேரளா எல்லையான ஒன்பதாறு சோதனை சாவடியில் சுகாதாரத் துறையினர் நிபா வைரஸ் பரிசோதனை பணிகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் தமிழகத்திற்குள் நிபா வைரஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலை-மூணாறு சாலை வழியாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாள்தோறும் பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த சூழலில் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் போக்குவரத்து அதிகம் உள்ள உடுமலை- மூணார் சாலையில் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
பாதுகாப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஒன்பதாறு சோதனை சாவடியில் நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட வேண்டியது அவசியமாக உள்ளது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது முறையான அறிவிப்பு வரவில்லை என தெரிவித்தனர்