வெள்ளகோவில் 52 மில்லிமீட்டர் , காங்கயத்தில் 33 மில்லிமீட்டர் மழை 3 மணி நேரம் பலத்த மழை
வெள்ளகோவில் மற்றும் காங்கயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. அதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாக அதிகபட்சமான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த மழையால் சாலைகள், தாழ்வான பகுதிகள், கால்வாய், கழிவுநீர் ஓடைகள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கியும், சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்தும் ஓடியது. பலத்த மழை காரணமாக சாலையோர கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. தாழ்வான பகுதி மற்றும் சாலைகளில் சுமார் 2 அடி உயரத்திற்கு மழை நீர் ஓடியதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மற்றும் நடந்து செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். வெள்ளக்கோவிலில் 52 மில்லி மீட்டரும் காங்கேயத்தில் 33 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. இரவு நேரத்தில் குளிர்ச்சி நிலவியது.