பல்லடம் அருகேயுள்ள கருடமுத்தூரை உதயபாரதி(25), விவசாயி. இவர் 26-ம் தேதியன்று குண்டடம் அருகேயுள்ள மேட்டுக்கடையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் தனது உறவினர் மகனை அழைத்துச் செல்வதற்காக டூவீலரில் மேட்டுக்கடை வந்தார். கொக்கம்பாளையம் ரோட்டில் சென்றபோது அங்கு நின்றிருந்த 2-பேர் ஏதோ அட்ரஸ் கேட்பது போல கேட்டுவிட்டு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை உதயபாரதியின் கழுத்தில் வைத்து மிரட்டி உதயபாரதி வைத்திருந்த 2-செல்போன்கள், ரொக்க பணம் ரூ. 10ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, உதயபாரதியின் டூவீலர் சாவியை பறித்து தூக்கி வீசிவிட்டு மாயமாகினர்.
இதுபற்றி குண்டடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் வேங்கிபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் டூவீலரில் வந்த 2-பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள், வாணியம்பாடியைச் சேர்ந்த விமல்(24), தேனியைச் சேர்ந்த காமுதுரை(24) என்பதும், இவர்கள் 2-பேரும் கடந்த 26-ம் தேதி குண்டடம் அருகே உதயபாரதியிடம் செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் திருடியது தெரிய வந்தது.
2-பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன்கள், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்