திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று(அக்.22) இரவு முழுவதும் கனமழை பெய்தது. இந்த நிலையில் கணபதிபாளையம் பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் மொச்சை, சோளம், மக்காச்சோளம் பயிர் சாகுபடியை சில தினங்களுக்கு முன் துவக்கினர். இந்த நிலையில் நேற்று இடைவிடாமல் பெய்த கனமழையால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது. மேலும் தோட்டத்து சாலை பகுதிகளில் குடியிருக்கும் விவசாயிகள் வெளியே வர முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஒவ்வொரு மழைக்காலங்களிலும் கணபதி பாளையம் பகுதியில் உள்ள நீர்வழிப்பாதை ஓடையின் வழியாக தண்ணீர் வெளியேறும் நிலையில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் தேங்காதவாறு இருக்கும். இந்த நிலையில் தற்பொழுது தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தனிநபர் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணத்தால் ஓடை சுருங்கி விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து நீர்வழி ஓடைப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.