பல்லடம் தாராபுரம் சாலையில் மதுரையில் இருந்து கோவை நோக்கி செல்லும் அரசு பேருந்து கள்ளிபாளையம் பகுதியில் நிறுத்தாமல் சென்றதால், திமுகவைச் சேர்ந்த அப்பகுதி கிளை நிர்வாகிகள் கோபம் உள்ளிட்டோர் தலைமையில் சிறைபிடித்தனர். கள்ளிப்பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்தம் மற்றும் போலீஸ் சோதனைச்சாவடி இருக்கும் இப்பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் முக்கிய பேருந்து நிறுத்தமாகும்.
அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் என அரசு சார்பாக மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பாகவும் போக்குவரத்துப் பணிமனைக்கு பலமுறை உத்தரவிட்டும், ஆனால் அதனை பேருந்து ஓட்டுநர்கள் பொருட்படுத்திக் கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைத்தனர். மதுரையில் இருந்து கோவை நோக்கி சுமார் 11 மணியளவில் செல்லும் அரசு பேருந்து கள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயணிப்பதற்காக கைநீட்டி நிறுத்திய போதும் நிற்காமல் சென்றதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பேருந்தை மறித்து சிறைபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து இதுபோன்று தவறுகள் நடக்காது என்று ஓட்டுநர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு பொதுமக்களால் விடுவிக்கப்பட்டனர். பேருந்துகள் நிற்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவதாக திமுக நிர்வாகிகளே தெரிவிக்கும் நிலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.