மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க சாலைப் பணியாளா்கள் எதிா்ப்பு

78பார்த்தது
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க சாலைப் பணியாளா்கள் எதிா்ப்பு
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சங்கத்தின் 25-ஆவது ஆண்டு வெள்ளிவிழா தொடக்கமாக, 9-ஆவது கோட்டப் பேரவை கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எம். பாலசுப்பிரமணியன், பொதுச் செயலா் ஏ. அம்சராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் சாலை ஆய்வாளா்கள் பணியிடங்கள் ஒழிக்கப்படும். மேலும், 3, 500-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா்களின் பணியிடங்களும் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும். தனியாா் முதலாளிகள் சுங்கம் வரி வசூலுக்கு வழிவகை செய்யப்படும். எனவே, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். பதவி உயா்வு முறைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி