முசிறி அருகே தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் தலைஅலங்காரம் - பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனி மாதம் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கி, பூத்தட்டு எடுத்து வருதல், கதவடைத்த கோயிலுக்கு ஆயிரம் பனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை 3-ம் தேதி திருத்தேர் வீதிஉலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு கோயில் முன்பு திருத்தேர் தலைஅலங்காரம் நடைபெற்றது. சுமார் 30 அடி உயரம் கொண்ட சிறிய தேர், பெரிய தேர் என இரண்டு திருத்தேர்களையும் பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
நேற்று நள்ளிரவு கோயில் முன்பு திருத்தேர் பூட்டப்பட்டு தலை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மதுரை காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தலை அலங்காரம் நிகழ்ச்சியை காண நள்ளிரவிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.