திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் சிறுகளப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதே ஊரில் உரக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அழுந்தலைப்பூர், மற்றும் புள்ளம்பாடி வங்கிகளில் அடகு வைத்த நகைகளை நேற்று முன்தினம் மீட்டு வந்து வீட்டில் வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கேரளாவிற்கு சுற்றுலா செல்வதற்காக வீட்டினை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
வீட்டில் இளங்கோவனின் தாய் மின்னல்கொடி(70), மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் கதவை உடைத்து பீரோவில் இருந்த 80 பவுன் நகை மற்றும் 1. 50 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனை பார்த்த மின்னல் கொடி இதுகுறித்து காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்தனர்.
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அகிலாண்டபுரம் பகுதியில் 30 பவுன் நகை திருடு போனது குறிப்பிடத்தக்கது.
காவல் நிலையமானது சிறுகளப்பூர் கிராமத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.