தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள குளத்துவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் பல ஆண்டுகளாக தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று வருவதற்கு கிராமத்தில் உள்ள பொது பாதையை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அப்பாதையின் அருகில் தமிழக அரசின் சார்பில் குளத்துவாய்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு இலவசமாக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்புகளில் உள்ள சிலர் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை பயன்படுத்தக் கூடாது என்று கூறி பிரச்சனை செய்து வருவதாக குளத்துவாய்பட்டி கிராம மக்கள் பலமுறை காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடமும் பலமுறை பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை குளத்துவாய்பட்டி கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு வட்டாட்சியர் இராமகிருஷ்ணனிடம், 2000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு தாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து அகதிகள் முகாமில் இருப்பவர்கள் பிரச்சனை செய்வதால் தங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்து கேட்டுக் கொண்டனர்.