மதுக்கடைகளை நடத்துவதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றாரா? என்று தேமுதிக சமூக வலைத்தள அணி துணைச் செயலாளர் தமிழரசன் பேசினார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில், கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பத்மபூஷன் விருது கெளரவிக்கும் விழாக்களை கொண்டாடும் விதமாக கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் முப்பெரும் விழா கொண்டாட்டங்கள் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மாபெரும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக சமூக வலைத்தள அணி துணைச் செயலாளர் தமிழரசன் சிறப்புரையாற்றிய போது "ஆளுங்கட்சியான திமுக அரசையும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விமர்சனம் செய்து, மதுக்கடைகளை நடத்துவதற்காகத்தான் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றாரா? என்று கேள்வி எழுப்பினார்.