சாத்தான்குளம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மாவட்ட கனிம வள உதவி இயக்குநர் பிரியா தலைமையிலான அதிகாரிகள் இன்று (செப்.,27) ஆய்வு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் கலுங்கு விளை சாலையில் தனியார் சார்பில் கல்குவாரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு வெடிவைத்து பாறைகள் உடைக்கப் படுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
இதனையடுத்து கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெடுங்குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 150க்கு மேற்பட்டோர் கண்ணீல் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, டிஎஸ்பி சுபகுமார், இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் மாவட்ட கனிம வள உதவி இயக்குநர் கல்குவாரியை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.