நாய்கள் துரத்தியதால் கடையில் தஞ்சம் அடைந்த புள்ளிமான் மீட்பு

72பார்த்தது
நாய்கள் துரத்தியதால் கடையில் தஞ்சம் அடைந்த புள்ளிமான் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு மான்கள் சரணாலயம், உடன்குடி அனல்மின்நிலையம் அமைக்கப்படும் பகுதியில் உள்ள தருவைகுளம் காட்டுக்குள் ஏராளமான மிளா, புள்ளிமான்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை வெள்ளத்தின் போது இந்த காடுகளில் இருந்து சில மான்கள் பேய்க்குளம், தட்டார்மடம், சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள விளைநிலங்கள் மற்றும் காடுகளுக்குள் தஞ்சம் மடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மான்கள் கடந்த சில மாதங்களாக இறை, தண்ணீர் தேடி அருகிலுள்ள கிராமங்களுக்குள் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது. தெருநாய்கள் துரத்தியதால் அங்கும் இங்குமாக நீண்டநேரம் துள்ளிக்குதித்து ஓடிய புள்ளிமான் தர்மராஜ் என்பவரது கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் தஞ்சம் அடைந்தது.

அந்த புள்ளிமானை தெருநாய்களிடம் இருந்து பொதுமக்கள் காப்பாற்றி கடைக்குள் பூட்டி வைத்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக திருச்செந்தூர் வனச்சரக வன அலுவலர் ஜெயசேகர், வனவர் கந்தசாமி ஆகியோர் பேய்க்குளத்துக்கு சென்றனர். வனத்துறையினரிடம் அந்த புள்ளிமானை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மானை வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி சென்று வல்லநாடு மான்கள் சரணாலயத்தில் விட்டனர்.

தொடர்புடைய செய்தி