நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி,. தீவிர அரசியலில் ஈடுபட்டு, 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார். இதனை தொடர்ந்து தனது கட்சிக்கான கொடியை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த அவர், தனது கட்சிக்கான தேர்தல் ஆணைய அனுமதிக்காக காத்தி்ருந்தார்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியுள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பெரும் உற்சாகத்துடன் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அதன் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள தலைவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர், தூத்துக்குடி -திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் புதுக்கோட்டை அருகே 51 அடி உயர கொடிக்கம்பத்தில் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் என மூன்று பேரும் இணைந்து கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.