தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிடக்கோரி, திருவாரூரில் ஏஐடியுசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; சுமைப் பணியில் இடைத்தரகா்களுக்கு வாய்ப்பளிக்கும் டெண்டா் முறையை ரத்து செய்ய வேண்டும்; கொள்முதல் சுமைதூக்கும் பணிக்கு வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. புஷ்பநாதன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் சி. சந்திரகுமாா், மாநில இணை பொதுச் செயலாளா்கள் ஜெ. குணசேகரன், கே. ராஜ்மோகன், மாநில துணைத் தலைவா்கள் எஸ். சிவானந்தம், பி. நாகேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.