நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சம்பா தாளடி பயிர்கள் எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த பின் வைக்கோலை கட்டு கட்டும் இயந்திரம் மூலம் கட்டுகளாக கட்டி, வெளி மாநிலங்களுக்கு ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதற்கான வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்வார்கள்.
பருவம் தப்பி பெய்த மழையினால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வைக்கோல் வீணாகி சரியான விலை போகவில்லை இதனால், தற்பொழுது வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் வைக்கோலை வாங்கி செல்ல இந்த ஆண்டு போதுமான வியாபாரிகள் வரவில்லை. அதனால் அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல்கள் அப்படியே உள்ளது.
இதுகுறித்து விவசாயி பாலசுப்ரமணியன் கூறுகையில் "வைக்கோல் ஒரு கட்டிற்கு 50 ரூபாய் செலவாகும் நிலையில். இருபது ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்குகிறார்கள். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது எனவும், எனவே வயல்களிலேயே வைகோலை கொளுத்தி விடுகிறோம் என்றும், அரசு நேரடியாக வைக்கோலை கொள்முதல் செய்யும் விதமாக வைக்கோல் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை டெல்டா மாவட்டங்களில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.