
பூந்தமல்லி நகராட்சியில் டெண்டர் விவகாரம்.. வாக்குவாதம்
பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பொறியியல் பிரிவில் டெண்டர் விவகாரம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த திமுக பூந்தமல்லி நகர துணை செயலாளரும் முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான அப்பர் ஸ்டாலின் அலுவலகத்திற்குள் சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பூந்தமல்லி நகர மன்ற பெண் திமுக தலைவர் காஞ்சனா சுதாகர் அலுவலக அறைக்குள் சென்று கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நகர மன்ற தலைவரை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி அப்பர் ஸ்டாலின் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த நகராட்சி ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்த நிலையில் அப்பர் ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதுகுறித்து நகர மன்ற தலைவர் காஞ்சனா, பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அலுவலகத்தின் உள்ளே நுழைந்து குடிபோதையில் ஊழியர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பெண் நகர மன்ற தலைவர் என்றும் பாராமல் தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நகர மன்ற அலுவலகத்தில் திமுக பிரமுகர் அப்பர் ஸ்டாலின் வாக்குவாதத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.