திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மேம்படுத்தி எத்தனால் உற்பத்தி மற்றும் இணை மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 1000 விவசாயிகளை திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக எச்சரிக்கை விடுத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் திருவள்ளூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொருளாளர் சி. பெருமாள் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சி. பெருமாள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் ஆயிரம் விவசாயிகளை திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் சங்க பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், சாமி. நடராஜன், ஜி. சம்பத், ஆப்சன் அகமது, மாவட்ட பொருளாளர் பிரபு மாவட்ட செயலாளர் ஸ்ரீநாத், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். ஜெயச்சந்திரன் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.