திருவள்ளூர்: முருகன் கோயிலில் கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடந்த 2ஆம் தேதி முதல் ஒரு வாரமாக கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. விழா முன்னிட்டு தினமும் மூலவர் தெய்வத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டும், உற்சவர் சண்முகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று மாலை சூரனை வதம் செய்த முருகப்பெருமானின் சின்னத்தை தணிக்க வண்ண மலர்கள் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான இன்று காலை வள்ளி தெய்வானை சமேத கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முன்னிட்டு பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை கொண்டு வந்து வழங்கினர். கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு வள்ளி தெய்வானை கழுத்தில் முருகப் பெருமான் தாலி கட்டினார். அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அரோகர முழக்கத்துடன் சுவாமி திருவுருவத்தை தரிசனம் செய்து வழிபட்டனர். திருக்கல்யாணம் தொடர்ந்து பெண்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் குங்குமம், தாலி வழங்கப்பட்டது.