பூந்தமல்லி-மவுன்ட் சாலை, குன்றத்துார்-போரூர் சாலைகளை இணைக்கும் பகுதியாக, பூந்தமல்லி-குன்றத்துார் தடம் உள்ளது. இதன் வழியாக மாங்காடு, குன்றத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையில், மாங்காடு முதல் குன்றத்துார் வரை மழைநீர் வடிகால் அமைக்க, இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
இதில், கால்வாய் நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றி, வேறு இடத்தில் நட வேண்டும். ஆனால், பெரும்பாலான மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை.
குறிப்பாக, மாங்காடு - பட்டூர் கூட்டு சாலை அருகே, வடிகால் நடுவே மின் கம்பத்தை அகற்றாமல் பணி நடக்கிறது. கம்பத்தின் அடியில் மண் எடுக்கப்பட்டதால், பிடிமானம் இல்லாமல் சாய்ந்துள்ளது. கம்பம் விழாமல் இருக்க, கிரேன் இயந்திரத்தால் முட்டுகொடுக்கப்பட்டு உள்ளது.
எதிர்பாராமல் மின் கம்பம் சாய்ந்தால், அவ்வழியே செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மின் வாரியம், மற்றும் நெடுஞ்சாலை துறையினர், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.