திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பெருஞ்சேரியில் 19ம் தேதி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை தொடர்ச்சியாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நேற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும், 2வது நாளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் இன்றும் ஆய்வு செய்தார். முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் காவல் ஆணையர் சோழவரம் வழியே அலுவலகத்திற்கு சென்று கொண்டு இருந்தார். சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நின்று கொண்டிருந்தது. பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஆணையரின் வாகனத்திற்கு பின்னால் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் அடுத்தடுத்த வாகனங்கள் காவல் ஆணையரின் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவல் ஆணையரின் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் சங்கர் உயிர் தப்பிய நிலையில் காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வம் காயம் அடைந்தார். காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.