திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 11ம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி விரைவு ரயில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது,
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங், தொடர் வண்டி துறை தென் மண்டல பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ. எம். சவுத்ரி ஆகியோர் நேரடியாக நிகழ்வு இடத்திற்கு வந்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் லூப் லைன் எனப்படும் கூடுதல் இருப்பு பாதை அருகே தொடர்வண்டிகள் தடம் மாறி செல்லும் இடத்தில் சரக்கு தொடர்வண்டி நிறுத்தப்பட்டு இருந்ததும், தொடர்ந்து பயணிக்க விபத்துக்குள்ளான தொடர்வண்டிக்கு சிகப்பு விளக்கு அனுமதி வழங்கப்பட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக கொருக்குப்பேட்டை தொடர்வண்டி துறை காவல் துறையினரும் வழக்கு பதிவு செய்து விபத்து நடந்த பகுதிக்கு தேசிய பாதுகாப்பு முகமை துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகளும் நேரடியாக வந்து தடயங்களை சேகரித்ததோடு, நிலைய ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையிலான தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டது. இரண்டு இருப்பு பாதையில் மாறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே விரைவு தொடர் வண்டி தடம் புரண்டதாக திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.