தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை அரசு மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் அவலங்கள் குறித்து பேரூராட்சி தலைவர் நேரில் பார்வையிட்டு கூறியதாவது: -
தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் நான்கு மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மகப்பேறு மருத்துவர் இல்லை. அல்ட்ரா ஸ்கேன், இசிஜி, டிஜிட்டல் எக்ஸ்ரே வசதிகள் இல்லை. பல் டாக்டர் இருந்தும் அதற்கான எக்ஸ்ரே வசதி இல்லை. மருத்துவப் பணியில் உதவியாளர்கள் பணியிடத்தில் ஆறு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. யானைக்கால் நோய் சிகிச்சை மற்றும் சித்தா மருத்துவத்திற்கு கட்டடம் இல்லாத நிலை உள்ளது. ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள இடிந்து விழும் கட்டடங்களை அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறுமுன் உடனடியாக அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மகப்பேறு மருத்துவர் உட்பட முழுநேர பணியில் 4 மருத்துவர்கள், தேவையான செவிலியர்கள், உதவியாளர்களை நியமிக்க வேண்டும், மக்களின் தேவைகளை உணர்ந்து கூடுதல் படுக்கை வசதிகள் மேம்படுத்தும் வகையில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.