கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூா் பகுதிகளில் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கி ஏ. டி. எம். காா்டில் உள்ள எண்கள் கேட்டு பணம் திருடும் மோசடியில் தொடங்கி இணைய வா்த்தகம், என பல்வேறு வழிமுறைகளில் சைபா் குற்றங்கள் நடந்து வருகிறது.
இவற்றை புகாா் செய்ய கும்பகோணம், திருவிடைமருதூா் பகுதி மக்கள் தஞ்சாவூா் சென்று அங்குள்ள சைபா் காவல் நிலையத்தில் புகாா் செய்ய வேண்டும். இதற்காக சுமாா் 2 மணி நேர பயணம் மேற்கொள்ள வேண்டும். இதனாலேயே பாதிக்கப்பட்ட அதிகம் போ் புகாா் தெரிவிப்பதில்லை.
தஞ்சாவூா் மாவட்டத்தை பொருத்தவரையில் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூா் உள்பட 7 காவல் துணைக் கோட்டங்கள் உள்ளன. இந்த 7 துணைக்கோட்டங்களுக்கு ஒரே ஒரு சைபா் கிரைம் காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
புகாா் கொடுப்பவா்கள், இணையதள குற்றங்களை விசாரிக்கும் காவலா்கள் வசதிக்காக கும்பகோணத்தை தலைமையாக கொண்டு கும்பகோணம், திருவிடைமருதூா் காவல் துணைக்கோட்டங்களுக்கு இணையதள குற்றங்களை விசாரிக்க புதியதாக ஒரு காவல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.