தஞ்சாவூரில் ஒரே நாளில் 125 டன் குப்பைகள் சேகரிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூர் மாநகரில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 125 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளில் நாள்தோறும் ஏறத்தாழ 110 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவது வழக்கம். இவை அனைத்தும் தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்குக்கும், 10 இடங்களிலுள்ள நுண் உரக் கிடங்குகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி, காந்திஜி சாலை, அண்ணா சாலை, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், தெற்கு அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. சில நாள்களாகப் புத்தாடைகள் வாங்க வருவதற்காக ஏராளமானோர் கடை வீதிகளில் திரண்டனர். இதனால், இப்பகுதிகளில் குப்பைகள் அதிக அளவில் சேர்ந்தன. தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி நாளான வியாழக்கிழமையும் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசுக் குப்பைகளும் சேர்ந்துவிட்டதால், இந்த இரு நாள்களில் குப்பைகள் அதிகமாகின. எனவே, வெள்ளிக்கிழமை அதிகாலை 4. 30 மணி முதல் மாலை 5. 30 மணி வரை ஏறக்குறைய 600 தூய்மைப் பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தத் தூய்மைப் பணியில் 62 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஏறத்தாழ 125 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.