தஞ்சாவூரில் காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்றுவதற்குக் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என். வி. கண்ணன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மனு அளித்தனர். பின்னர், ஆட்சியரக வளாகத்தில் தண்ணீர் விட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் மணியரசன் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர் விட்ட நிலையில், காய்ந்து கருகக்கூடிய கொடுமையைப் பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், பிள்ளை வாய்க்கால், ஆனந்த காவேரி வாய்க்கால் போன்ற பாசனப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரு முறை தண்ணீர் விட்டால் பயிர்களைக் காப்பாற்றி விடலாம் என ஆட்சியாளர்களிடம் விவசாயிகள் பல முறை மனுக்கள் கொடுத்தனர்.
மேட்டூர் அணையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை வரவேற்கிறோம். பூதலூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் விடவில்லை.
காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்றுவதற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்" என்றார்.