தஞ்சாவூர் சரகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 67 காவல் அலுவலர்கள், காவலர்களுக்கு தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் (டி. ஜி. பி. ) பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தஞ்சாவூரில், தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தஞ்சாவூர் சரகத்துக்கு உள்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
தொடர்ந்து, தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சரக மாவட்டங்களை சார்ந்த காவலர்களுக்கான குறை தீர் முகாமை நடத்தி, 482 காவல் அலுவலர்கள், காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்து, உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். பின்னர், சரக மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்த, திருட்டு போன பொருள்களை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்த 67 காவல் அலுவலர்கள், காவலர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மேலும், சரகத்தில் புதிதாகக் கட்டப்படும் காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் பழுதுகளைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்தார்.
இந்நிகழ்வில், மத்திய மண்டல காவல் தலைவர்
க. கார்த்திகேயன், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.