தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டும் நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றை நம்பியே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினத்தில் இருந்து சரக்கு ரயிலில் 21 வேகன்களில் 1, 350 டன் பொட்டாஷ் உர மூட்டைகள் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் மற்றும் தனியார் விற்பனை நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. இந்த உரம் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட உள்ளது.