தண்ணீர் கேட்டு ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்

78பார்த்தது
கடைமடை பாசனத்திற்கு ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்பி தரக்கோரி ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


கல்லணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, 17 தினங்களை கடந்த நிலையில் கடைமடைக்கு போதிய அளவு தண்ணீர் வந்து எட்டிப் பார்க்கவில்லை. இதன் காரணமாக கடைமடை பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஒரு போகம் சாகுபடி மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில் இங்குள்ள நூற்றுக்கணக்கான ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. போதிய அளவு மழை இல்லாததாலும், கடைமடைக்கு கல்லணை கால்வாயில் தண்ணீர் வராததாலும் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் கொள்ளிடத்தில் பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு திறந்து விடப்படுகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் நடைமுறை பாசன பகுதியில் ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்பி தரப்படும் என அறிவித்தார். ஆனால் பொதுப்பணி துறையினர் இதில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். எனவே கடைமடை பகுதியில் பாசன வாய்க்கால்களை தூர்வாரி ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்பி தர வேண்டும் விவசாயத்தை உறுதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் என். வி. கண்ணன் தலைமையில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை சுல்தான் குளம் ஏரியில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி