நீடாமங்கலம்: அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்.. இளைஞர் உயிரிழப்பு

54பார்த்தது
நீடாமங்கலம்: அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்.. இளைஞர் உயிரிழப்பு
நீடாமங்கலம் வட்டம், பெரியகோட்டை வடக்குதெருவைச் சேர்ந்தவர் பால்சாமி மகன் மாரியப்பன் (30). தொழிலாளி. இவர், வியாழக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பல்லவராயன்பேட்டை பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிளில் நீடாமங்கலம் தாலுக்கா, ஆதனூர் மண்டம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் தாமரைக்கண்ணன் (23) பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறமாக வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியது.

இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த தாமரைக்கண்ணன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அறிந்து அங்கு வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் இளவரசு மற்றும் போலீஸார் மாரியப்பனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பனின் மனைவி ஈஸ்வரி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் வீரமணி (46) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி