ஒரத்தநாடு பகுதியில் மழை பாதிப்பு: ஆட்சித்தலைவர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடக்குகோட்டை சித்தாண்டி ஏரியின் நீர்வரத்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர் வடக்குகோட்டை, நட்சன்காடு கொக்குவாரி பாலத்தில் ஆய்வு செய்து, கொக்குவாரியில் நீர்வரத்து செல்வதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள், தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது குறித்து அலுவலர்களுடன் அறிவுறுத்தினார்கள். மேலும், சங்கரனார் குடிக்காடு செங்கலோடை வடிகால் வாய்க்கால் சோழகன்குடிக்காடு சந்திப்பில் நீர்வரத்து செல்வதை பார்வையிட்டு, தண்ணீர் வயல்களுக்குள் செல்லாமல் தவிர்க்க பொதுப்பணித் துறை, நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். வெள்ளக் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்திட ஏதுவாக முதல்நிலை மீட்பாளர்கள், நீச்சல் வீரர்கள், பாம்பு பிடிப்பவர்கள், மரம் வெட்டுபவர்கள், கால்நடை பாதுகாப்பு முதல்நிலை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார்நிலையில் உள்ளனர் என்றும், வெள்ளக் காலங்களில் பயன்படுத்திட ஏதுவாக தேவையான அளவில் மருந்துப் பொருட்கள், ஆம்புலன்சுகள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளனர் என்றும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, வட்டாட்சியர் முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யாமொழி, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.