ஒரத்தநாடு மற்றும் திருவோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 18) காலை தொடங்கி விடாமல் கனமழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பணி நிமித்தமாக அலுவலகம் சென்று வீடு திரும்பியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதேபோல் பொதுமக்களும் மழையில் நனைந்தபடியே அன்றாட வேலைகளை மேற்கொண்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மேலும் தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் பாப்பாநாடு கடைத்தெருவின் அருகே சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.