பட்டுக்கோட்டையை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் அமரன் (வயது 30), மீனவரான இவரும் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன் (27) என்பவரும் நேற்று(செப்.3) மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் திருவோணத்தில் இருந்து வெட்டிக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் இலுப்பவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே கடந்து சென்றபோது. அதே சாலையில் எதிரே வந்த ஒரு லோடு ஆட்டோவும் அருள்அமரன் மற்றும் மணிகண்டன் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அருள்அமரன் படுகாயம் அடைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மணிகண்டனை சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவோணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.