தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள புலவன்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகள் ராகவி (வயது 30). சம்பவத்தன்று இவர் தனது பகுதியில் உள்ள ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டார். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தார். பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் உள்ள துறையூர் பகுதியில் வந்தபோது திடீரென ராகவி மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்தார்.
இதனைப் பார்த்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராகவியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.