மரக்கன்றுகளுக்கு லாரி மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தீவிரம்

77பார்த்தது
மரக்கன்றுகளுக்கு லாரி மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தீவிரம்
தஞ்சை மாவட்டத்தில், நெடுஞ்சாலை ஓரங்களில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு, வெயில் காலத்தில் பட்டுப் போகாமல் இருக்க டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு தினமும் காலை மாலை என இரு வேளைகளும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. பத்தாயிரம் மரக்கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு 48 ஆயிரம் லிட்டர் வீதம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகள், புதிதாக சாலை அகலப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்ற போது அந்த பகுதிகளில் ஒரு மரத்தை அகற்றினால் பத்து மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற உத்தரவின்படி பல்வேறு இடங்களில் புதிதாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. இதன்படி தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு உட்கோட்ட பகுதிகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சாலை போடப்படும் இடங்களில் ஐந்தாண்டுகளுக்கு சாலைகளை பராமரிப்பதோடு அங்கு நடப்படும் மரக்கன்றுகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனமே பராமரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இப்பகுதியில் புங்கன், வேம்பு, அத்திமரம், நாவல், புளியமரம், மாமரம், மகிழம்பூ, பூவரச மரம், ஆலமரம், அரசமரம் என பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு முள்வேலி அமைக்கப்பட்டது. தற்போது வெயிலால் இந்த செடிகள் பட்டுப்போகாமல் இருக்க லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி