கும்பகோணம் அருகே காண்டாமிருக கொம்பு விற்பனை செய்ய முயன்ற 5 பேர்களை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தமிழ்நாடு வனச்சரக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கும்பகோணம் பகுதியில் காண்டாமிருகத்தின் கொம்பு விற்பனை செய்ய சிலர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததால் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனச்சரகர் பொன்னுச்சாமி தலைமையிலான வனத்துறையினர் திங்கள்கிழமை விசாரணை நடத்தி திருநாகேசுவரத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் சோதனை செய்தனர். அவய்களிடம் காண்டாமிருகத்தின் கொம்பு இருந்தது தெரியவந்தது, மருத்துவ பயன்பாட்டிற்காக இதை விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது.
இது தொடர்பாக நாகபட்டினத்தைச்சேர்ந்த கலியபெருமாள் (80), திருவாரூரைச்சேர்ந்த காஜாமைதீன் (76), கும்பகோணத்தைச்சேர்ந்த செந்தில் (45), தென்னரசு (47), விஜயகுமார் (57) ஆகிய 5 பேர்களை கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.