சிவகங்கை: மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

52பார்த்தது
சிவகங்கை: மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பாபா அமீர்பாதுஷா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. சாணக்கியர் சதுரங்க அகாதெமி, பாபா அகாதெமி இணைந்து நடத்திய இந்தப் போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு தாளாளர் பாபா அமிர்பாதுஷா தலைமை வகித்தார். சாணக்கியர் சதுரங்க அகாதெமி நிறுவனர் அதுவன், போட்டி நடுவர்கள் சசிக்குமார் ராஜேந்திரன் உடையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிவகங்கை மாவட்ட சதுரங்கக் கழக இணைச் செயலர் மீ. ராமு, காவல் உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டி 7 வயது பிரிவு, 9 வயது பிரிவு, 11 வயது பிரிவு, 13 வயது பிரிவு மற்றும் 17 வயது பிரிவு என 5 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, புதுவயல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 260- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக கூடுதல் செயலர் பிரகாஷ் மணிமாறன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி நாராயணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் வரதராஜன் வரவேற்றாா்.

தொடர்புடைய செய்தி