சிவகங்கை அருகே சாலூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னழகி அம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து நடத்தும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் சிவகங்கை, திருச்சி புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 காளைகளும் அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 118 வீரர்களும் பங்கேற்றனர்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும் என்கிற வடமாடு மஞ்சுவிரட்டு விதிமுறைகளின் அடிப்படையில்,முதலில் களம் இறங்கிய 8 மாடுகளில் 5 மாடுகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் செயல்பட்டு அதனை அடக்கி பார்வையாளர்களின் கைதட்டளை பெற்றனர்.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். போட்டியில் மாடு முட்டியதில் பத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண சாலூர் மட்டுமில்லாமல் சிவல்பட்டி, மலம்பட்டி , கூட்டுறவுபட்டி இடையமேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வடமாடு மஞ்சுவிரட்டு ஆர்வளர்கள் போட்டியினை கண்டுகளித்தனர்.