கடந்த 1993 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் புஷ்பவனேஸ்வரர் செளந்தரநாயகியம்மன் கோவில் பங்குனி தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவு கிராம மக்கள் சார்பில் சந்தை திடலில் பாட்டுக்கச்சேரிக்கு அனுமதி பெற்று நடத்தப்பட்டது. ஆனால் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அதிகளவில் கூட்டம் கூடியதால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விட்டனர். இதில் ஆத்திரத்தில் இருந்த ஒரு கோஷ்டியினர் 93 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி மறுநாள் நடந்த தேரோட்டத்தின்போது காவல்துறையினரிடம் மோதலில் ஈடுபட்டதுடன் தேரை நடு சாலையில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமாதானம் பேசியும் கலைந்து செல்ல மறுத்ததுடன் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் திருப்புவணத்தை சேர்ந்த பன்னீர்ச்செல்வம், ரவி, முத்தையா, வீரமணி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அடையாளம் தெரியாத 260 பேரை வழக்கில் சேர்த்தனர். இந்த வழக்கு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் இவ்வழக்கு சம்பந்தமாக 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அனைவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததன் காரணமாக அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.