சிவகங்கை அருகே செம்பனூரில் மாசி களரியை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் சுற்றுவாரியாக களமிறக்கப்பட்டனர். பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு டூவீலர், கட்டில், பீரோ, டேபிள், எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 22 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு செம்பனூர் சுகாதார மருத்துவகுழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இரண்டு பேர் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் ஜல்லிக்கட்டையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்க முடியவில்லை. பல காளைகள் நின்று விளையாடியதும் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க வீரத்துடன் களமிறங்கி பல காளைகளை அடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.