சிவகங்கை நகராட்சியின் கீழ் 27 வார்டுகளும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இங்கு திருப்பத்தூர் சாலையில் வடக்கு மயானமும், தெற்கே மானாமதுரை சாலையில் தெற்கு மயானமும் செயல்பட்டு வருகிறது.
இதில் தெற்கு மயானத்தில் நவீன எரிவாயு தகனமேடை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பெரும்பாலும் உடல்கள் புதைக்கப்படுவதில்லை. அதிக இடம் இருக்கும் காரணத்தால் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டி வைத்திருப்பதுடன் தரம் பிரிக்கும் பணிகளும் நடைபெறுகிறது.
மேலும் நகராட்சிக்குட்பட்ட ஒரு பகுதியில் ஏற்கனவே கொட்டப்பட்டுவந்த குப்பைகளை அகற்ற பொது மக்களும், பசுமை தீர்ப்பாயமும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த குப்பைகளும் இங்கு வந்து கொட்டப்படுவதால் அதனை உரமாக மாற்ற நகராட்சி சார்பில் மயானத்திற்குள் ஆழமாக குழி தோண்டி அதில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதனை காரணம் காட்டி அந்த குழி தோண்டும்போது எடுக்கப்படும் கிராவல் மணல் தரமாக இருப்பதால் அந்த பணியை மேற்கொள்பவர்கள் கடத்தி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.