சிவகங்கை மாவட்டம் உரிமையாளர திருப்புவனம் பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பிரமனூர் கால்வாய் கரையில் ஓட்டு வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். 19 குடும்பத்தைச் சேர்ந்த 80பேர் தற்போது அங்கு வசிக்கின்றனர். கடந்த 7ம் தேதி பிரமனூர் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது கால்வாயின் வலது புற தடுப்புச்சுவர் 80 மீட்டர் தூரத்திற்கு இடிந்து கால்வாயினுள் விழுந்தது. தடுப்புச்சுவர் சாய்ந்ததால் அதனை ஒட்டி இருந்த முனியசாமி, வீரா, முத்துச்சாமி உள்ளிட்ட ஐந்து பேரின் வீடுகளும் இடிந்து கால்வாயினுள் விழுந்தது. அடுத்தடுத்த் வீடுகளும் சேதமடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் பேரூராட்சி அதிகாரிகளும், வருவாய்துறை அதிகாரிகளும் தூய்மை பணியாளர்கள் உட்பட 80 பேரையும் அருகில் உள்ள தனியார் திருமண மகாலில் தங்க வைத்தனர். வீடுகளில் இருந்த டிவி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றுடன் கடந்த ஐந்து நாட்களாக மகாலில் தங்க வைக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என எம்எல்ஏ தமிழரசி தெரிவித்திருந்தார். ஆனால் இன்று வரை இடம் வழங்கப்படுவது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர், ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டதுடன் சரி வேறு நடவடிக்கைஎதுவும் எடுக்கப்படவில்லைஇதனால் தற்போது அவதிஅடைந்து வருகின்றனர்.