சிவகங்கை மாவட்டம் கீழடியில் வையை இயற்கை வேளான்மை குழு சார்பில் கடந்த 4ம் ஆண்டு விதை திருவிழா இன்று நடந்தது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்ரமணியன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னாள் மாநில தலைவரும் சுற்றுப்புற சூழல் ஆய்வாளருமான மகேந்திரன், சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்புவனத்தை அடுத்த கணக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணகாரசேதுபதி இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருபவர்களில் ஒருவரான இவர் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து வருகிறார். ஒருங்கிணைந்த ராமநாதபுர மாவட்டத்தின் பாரம்பரிய நெல்லான தில்லைநாயகம் நெல்லை கடந்தாண்டு அறிமுகம் செய்தார். இயற்கை வேளான்மையை மேற்கொண்டு வரும் இவர் மற்ற விவசாயிகளையும் இயற்கை வேளான் தொழிலில் ஈடுபட வலியுறுத்தி வருவதுடன் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களையும் வழங்கி வருகிறார். விவசாயத்திற்கு தேவையான பொருட்களை பெறவும் விற்பனை செய்யவும் ஆண்டு தோறும் விதை திருவிழா கீழடியில் நடத்துவது வழக்கம், இந்தாண்டு திருவிழா இன்று நடந்தது. 4ம் ஆண்டு மலரை மகேந்திரன் வெளியிட ஒருங்கிணைப்பாளர் கருணாகரசேதுபதி பெற்று கொண்டார். இயற்கை வேளான்மையை ஆதரிக்க வேண்டும், இதுபோன்ற விழாக்களில் விவசாயிகள் பங்கேற்று பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என பலரும் கேட்டு கொண்டனர்.