சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக ஆளுநர் பங்கேற்ற DD பொன்விழா ஆண்டில் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வாசகங்கள் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
தமிழக மக்களின் எண்ணங்கள் சிந்தனைகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர் தான் ஆளுநர் என்றும், மற்ற மாநிலங்களில் 3 மொழிகள் கற்றுத் தருவதாக கூறுவது தவறு என்றார். மேலும், ஹிந்தி பேசும் மாநிலங்களில் அந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு இந்தி ஒரு மொழி தான் தெரியும். அவர்களுக்கு ஆங்கிலமும் கற்றுத் தருவது கிடையாது. ஆங்கில ஆசிரியர்களும் கிடையாது. ஆங்கில புத்தகங்களும் கிடையாது. அவர்களுக்கு ஆங்கில வாசகங்கள், வாக்கியங்கள் எழுதவோ படிக்கவோ தெரியாது என தெரிவித்தவர், தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக எந்த அரசு வந்தாலும் இரு மொழி கொள்கையை தான் கடைபிடித்து வருகின்றன. தமிழகத்தில் இந்தி தேர்வுகளை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து தேர்ச்சி பெற்று வேலைக்கு செல்கின்றனர். தமிழகத்தில் தனியார் மற்றும் மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை கற்றுத் தருகின்றனர். இந்தியை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கு இங்கு தடை ஏதும் கிடையாது என்றவர், தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான் அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது இதனை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்தார்.