தாரமங்கலம் சுற்றுவட்டார வாகன ஓட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் ஆகியோர் நலச்சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாரமங்கலம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் சங்க அலுவலகம் அமைத்தும் அந்த இடத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தியும் பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றுலா வாகன அலுவலகம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அந்த இடத்தில் கற்கள் நடப்பட்டு இருந்தன. நேற்று இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வாகன ஓட்டிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தாரமங்கலம் போலீஸ் நிலையம் சென்றனர்.
அங்கு வாகன ஓட்டிகள் போலீசாரிடம் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சங்க அலுவலகம் அமைத்து வாகனங்களை இயக்கி வருகிறோம். எங்களால் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாத நிலையில் வாகனங்களை இயக்கி அலுவலகம் நடத்தி வருகிறோம். கடந்த சில வருடங்களாக இந்த இடத்தை அப்புறப்படுத்த கைலாசநாதர் கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது சங்க அலுவலகத்தை கைலாசநாதர் கோவில் நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்தியது எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. என்றனர்.