சேலம்: சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை சூழ்ச்சியின் காரணமாக ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18 ஆம் தேதி சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தையொட்டி கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கும், அதே போல் தமிழக அரசு சார்பில் ஈரோடு-பவானி பரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன்சின்னமலை நினைவு சின்னத்திலும் மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் சரோஜா மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
மக்களவை உறுப்பினர் ஏகேபி சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தீபா கனிகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெற்றிவேல், மனோன்மணி, ராஜா, சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி மகேஸ்வரி மருதாசலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி விடுதலை போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்த அரசு சார்பில் 5 பேர்கள் என இரு குழுக்களாக மரியாதை செலுத்தினர்.