சேலம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் கலெக்டர் கூறியதாவது: -
முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களின் வசதிக்காக புதிய அறிவுசார் மையங்களை ஏற்படுத்துதல், நூலகங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் சேலம் மாவட்ட மைய நூலகத்தை மேலும் நவீன மயமாக்கும் வகையில் ரூ. 1 கோடியே 68 லட்சத்தில் கட்டிட மராமத்து பணிகள் நடக்கிறது.
மாவட்டத்தில், ஒரு மாவட்ட மைய நூலகம், 49 கிளை நூலகங்கள், 78 ஊர்புற நூலகங்கள், 41 பகுதி நேர நூலகங்கள், 16 முழு நேர கிளை நூலகங்கள் மற்றும் ஒரு நடமாடும் நூலகம் என மொத்தம் 186 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றது. மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், பொது அறிவு உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு நூல்கள் உள்ளன. கார்டூன் திரைப்படங்கள் குறித்த புத்தகங்கள், வண்ணம் தீட்டுதல், காகித சிற்பங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என மொத்தம் 1 லட்சத்து 94 புத்தகங்கள் உள்ளன.
இதில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கென 3 ஆயிரத்து 44 புத்தகங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.