திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை மணப்பாறை கே. பெரியபட்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். சேலத்தை அடுத்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது, அந்த பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மதன் (20) என்பவர் டீ குடித்துவிட்டு செல்லலாம் என்றும், இதனால் பஸ்சை சாலையோரம் உள்ள டீக்கடையில் நிறுத்துமாறும் கூறியுள்ளார்.
கருப்பூர் வெள்ளாளப்பட்டி பகுதியில் சென்றபோது, பயணி மதனிடம் டிரைவர் கார்த்திக் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த உப்பு லோடு லாரி மீது பஸ் மோதியது. இதில், டிரைவர் அருகே நின்று கொண்டிருந்த பயணி மதன், பஸ் முன்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தார். இந்த விபத்தில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிரைவர் கார்த்திக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பஸ்சில் இருந்த சக பயணிகள் டிரைவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.