சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1வது கோட்டம் மாமாங்கம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தில் இணைப்பு பாலம் அமைத்து தர வேண்டி அந்த பகுதி மக்களுடன் இணைந்து பாமக அருள் எம்எல்ஏ இன்று நரசோதிபட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அலுவலகத்திற்க்கு பூட்டு போட சென்றனர். அங்கு சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ராக ரவளி ராமலட்சுமி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பூட்டு போட சென்ற எம்எல்ஏ மற்றும் பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அலுவலக திட்ட இயக்குனர் சீனிவாச ரெட்டி எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மாதத்தில் இணைப்பு பாலம் அமைத்து தருவதாக உறுதி அளித்தார். அப்போது அருள் எம்எல்ஏ இணைப்பு பாலம் அமைத்து தராவிட்டால் அம்மா சத்தியமாக அலுவலகத்திற்க்கு பூட்டு போடுவேன் என ஆவேசமாக பேசினார். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் பாமக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.