சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 37-வது வார்டில் புதிதாக முக்கனி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில், மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் மேயர் ராமச்சந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் சேலம் மாநகராட்சி 37-வது வார்டு செல்வ நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஆயிரம் சதுரடி நிலத்தில் மா, பழா, வாழை, சீதா, நெல்லி உள்ளிட்ட 100 பழச்செடிகள் நடப்பட்டு உள்ளது. 1 நிமிடத்தில் 100 நபர்களை கொண்டு 100 பழச்செடிகள் நடப்பட்டன. இங்கு நடப்பட்டுள்ள செடிகள் கம்பி முள்வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இதனை முக்கனி பூங்கா என்று அழைக்கலாம். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலியாக உள்ள சொந்த இடங்களில் இது போன்று பழ மரக்கன்றுகளும், நிழல் தரும் மரக்கன்றுகள், மூலிகை செடிகள் நட்டு பசுமை மயமாக்கப்படும். இதன்மூலம் பசுமை நிறைந்த பகுதியாக மாற்றப்பட்டு தூய்மையான சுற்று சூழலை உருவாக்க முடியும், என்றார்.
தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள், வாசகங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை மேயர் ராமச்சந்திரன் வெளியிட்டார். பின்னர் அவற்றை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.